SHRI பாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலைகழகத்தின் ஒர் அங்கமாக விளங்கும் மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், நிலைய மருத்துவ அதிகாரியாகப் பணிபுரிந்துகொண்டிருக்கும் நான், Dr. லக்ஷ்மண பெருமாள், நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துத்தொழிலாளர்களும் பணிநிமித்தம் கடைப்பிடிக்கவேண்டிய சில ஒழுங்குமுறைகள் பற்றி, வலைத்தளத்தின் வாயிலாக எடுத்துக்கூறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். தொழிலாள நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள். நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களும், நிர்வகிக்கும் அங்கத்தினர்களும், நிறுவனத்தின் உரிமையாளர்களும் ஒருங்கிணைந்து, ஒருவர் நலனில் மற்றவர் அக்கரைகொண்டு செயல்பட வேண்டும். இவற்றுள் களத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இன்றியமையாததாகவும் கருதப்படுகின்றது. இவற்றை எல்லாம் அடிப்படையாகக் கொண்டு நிறுவன இயக்கத்திற்கு தொழிலாளர்கள் அனுசரிக்கவேண்டிய நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் கடமை உணர்வுடன், தங்களுடைய செயலாற்றல்கள் நிறுவன வளர்ச்சிக்கும், மறைமுகமாக தங்களது வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்ற எண்ணங்கள் தங்கள் மனதில் ஆழமாகப்பதிக்கப் பெற்று கடமையாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது கடமைகளை உரிய முறையோடு, வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளுடன் செயலாற்றுதல், எல்லோருடைய உரிமையும் பாதுகாக்கப்படும் சூழ்நிலையை உருவாக்குகின்றது. ஏனென்றால் ஒருவர் தம் உரிமை பெறுவதற்கு, மற்றவர்கள் கடமையாற்ற வேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதியாகும். நிறுவனம் தமக்கு என்ன செய்துள்ளது, என்ன செய்யப்போகின்றது என்ற கருத்தில் இல்லாமல், தாம் நிறுவன வளர்ச்சிக்கு என்ன செய்துள்ளோம், என்ன செய்யப்போகின்றோம் என்ற உந்துதல் அடிமனத்தில் பதியப்பெற்று, ஒவ்வொரு தொழிலாளரும் செயலாற்றும் பட்ச்சத்தில், நிறுவன வளர்ச்சியும், அத்துடன் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களின் வளர்ச்சியும், எவராலும் எப்பொழுதும் தடுக்க முடியாது, என்பது, ஆணித்தரமான, அசைக்க முடியாத ஒரு உண்மையாகும். தொழிலாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடுகளுள் காலம் தவறாமை முன்னுரிமை பெறுகின்றது. உரிய நேரத்திற்கு பணிக்கு வந்து, செய்யும் செயல்களில், முழுக்கவனம் செலுத்தி செய்யப்படும் அனைத்து செயல்களும், சீராகவும், செம்மையாகவும் அமைந்து, முழுப்பயனையும் உறுதியாகப் பெற்றுத்தரும். உலக வாழ்வில் இயங்கும் அனைத்து செயல்பாடுகளுக்கும், control என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கட்டுப்பாடு என்பது மிகமிக அவசியமானதாக அமைந்துள்ளது. கட்டுப்பாடற்ற செயல்கள் அனைத்தும் தொடர்ச்சியாக முழுமையாக வெற்றி அடைவதில்லை. உதாரணமாக வேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு மிக அவசியமான ஒன்று brake என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் கருவியாகத்தான் இருக்கின்றது. வேகக்கட்டுப்பாட்டுக்கருவி இல்லாமல் வாகனங்களை சிறிதளவும் நகர்த்திச்செல்ல முடியாது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். எல்லா செயல்களும் சீராக நடைபெறுவதற்கு இன்றியமையாததாகக் கருதப்படுகின்ற கட்டுப்பாடுகள் இருவகைப்படுத்தப்படுகின்றது. அதாவது பிறருடைய கண்காணிப்பு எதுவும் தேவை இல்லாமல், அவரவருடைய பொறுப்புகளும், கடமைகளும் தாமே உணர்ந்து செயலாற்றும் ‘சுய கட்டுப்பாடு’ ஒருவகையாகவும், பிறரின் கண்காணிப்பில் இயங்குவது அல்லது இயக்கப்படுவது மற்றொரு வகையாகவும் கருதப்படுகின்றது. ஒவ்வொரு, தொழிலாளியும் சுய கட்டுப்பாட்டுடன் தம் கடமைகளை அறிந்து செயலாற்ற வேண்டும். மேலும் தமக்குத்தாமே, தம்முடைய செயல்பாடுகளை தணிக்கை செய்து, செய்யப்படும் செயல்களின் நேர்த்தியையும், தரத்தையும், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும். வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறுஎய்தி உள்ளப் படும்” என்ற குறளுக்கு இணங்க, உண்மையாக, நேர்மையாக, யாருடைய தூண்டுதலும் இல்லாமல், உயர்அதிகாரிகளின் கண்காணிப்பும் தேவை இல்லாமல், தமது கடமையைத் தாமே உணர்ந்து, செயல்படுபவோரின் செயல்பாடுகள் நிர்வாகத்தால் அறியப்பட்டு, அவர்தம் செயல்பாடுகள் பாராட்டப்பட்டு, உரிய பலன்களை பெற்றுத்தரும். “துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி இன்பம் பயக்கும் வினை” என்ற குறளுக்கு இணங்க, இறுதியில் இன்பம் பயக்கக்கூடிய செயல்கள், செயலாற்றும்பொழுது இடையூறுகளும், துன்பங்களும் ஏற்படுத்துவதாக இருந்தாலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது செயல்பட வேண்டும். சுயகட்டுப்பாட்டுடன் தம்முடைய கடமையை செவ்வனே செய்தல், எல்லா செல்வங்களையும் பெற்றுத்தரும் நிலையில், தம்முடைய உறவினர்கள், நண்பர்கள், தமக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் ஆகிய அனைவரிடமும், அதற்கும் மேலாக தம்மை பகைத்து, தமக்கு எதிராச் செயல்படுபவரிடத்தும் எவ்வித மாறுபாடும் இல்லாமல், அவரவர்களுக்கு உரிய மரியாதை அளித்து, கனிவாக அன்புடன் பழகும் “கண்ணியம்” என்ற கோட்பாடுடன் செயல்படவேண்டும். சுருங்கக்கூறின் எல்லா மக்களும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கையை வாழ்வின் தாரகமந்திரமாக ஏற்று செயல்பட வேண்டும். இதுவரை எவ்விதமான தொழில் செய்பருக்கும் பொருந்தக்கூடிய பொதுவான கருத்துக்கள் உங்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள், இத்துடன் இன்னும் சில கொள்கைகளும் கருத்துக்களும் மனதில்கொண்டு செயலாற்ற வேண்டும். உடல்அளவிலும் மனதளவிலும் சஞ்சலத்துடன் சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனை அணுகும் அனைத்து நோயாளிகளிடமும், அன்பு மற்றும், கனிவு கலந்து பழகுதல் வேண்டும். நோயாளிகளுக்குத் தேவையான பரிசோதனைகள் செய்து, உரிய முறையில் சிகிச்சை அளித்து அவர்தம் துயர் துடைக்கவேண்டும். நோயாளிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து,. அவர்தம் தனிமனித சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டும். சுருங்கக்கூறின், அனைத்து நோயாளிகளையும் சகமனிதர்களாகப் பாவித்து, அன்புடன் அரவணைத்து, இன்முகத்துடன் உரிய மரியாதை கலந்து பழகவேண்டும். பிறப்புஒக்கும் எல்ல உயிர்க்கும் சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான். என்பது குறள். பிறப்பு என்பது எல்லா மக்களுக்கும் பொதுவானதாக இருக்கும் நிலையில், அவரவர் செய்யும் செயல்களைப் பொறுத்து அவரவர் அடையும் பெருமை மாறுபடுகின்றது. எடுத்துரைக்கப்பட்ட கருத்துகள் அனைத்தும் மனதில்கொண்டு, அனைவரும் அவர்தம் கடமைகள் செய்து, வாழ்வில் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று இன்புற்று வாழ நல்வாழ்த்துக்கள். உள்ளதுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது தள்ளினும் தள்ளாமை நீர்த்து” என்ற குறளுக்கு இணங்க, நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம் நலமுடன் வாழ்வோம் நன்றிகள் பல வாழ்க பாரதம்.